தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கலம் இறங்குவார் என்று கூறிவந்த நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் அதிர்ச்சிக்கு ஆளான ரஜினி ரசிகர்கள் இனி ரஜினி அரசியலில் களமிறங்க மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநரை சந்தித்து அரசியல் குறித்து பேசினார். இதனால் தமிழக அரசியலில் திடீர் பூகம்பமே ஏற்பட்டது. இந்த சூழலில் பாஜக கட்சியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மாஸ்டர் பிளான் போடுவதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதாவது அதிமுக கட்சியில் தற்போது நிலவும் பிரச்சனைகளை பயன்படுத்திக்கொண்டு ரஜினிகாந்தை அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவதற்கு பாஜக திட்டம் போட்டுள்ளது. இந்த டீலுக்கு ரஜினிகாந்த் ஒருவேளை ஒத்து வராவிட்டால் 2024-ம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தல் மற்றும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. ஒருவேளை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி பேசினால் அவருக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பை கொடுக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதற்காக ரஜினிகாந்தை திமுக கட்சியினர் உட்பட பல்வேறு கட்சியினரும் விமர்சித்தனர். இதன் காரணமாக திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ரகசிய உத்தரவு ஒன்றினை போட்டுள்ளாராம். அதாவது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு கொடுத்தால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது ரஜினியை பற்றி யாரும் விமர்சித்து ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ஆர்டர் போட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் தேர்தலில் இருந்து விலகியதற்கு உடல்நிலை மட்டும் தான் காரணமா இல்லை அதற்கு பின்னணியில் திமுக இருக்கிறதா என்ற சந்தேகம் இதுவரை தீர்ந்த பாடில்லை. இதனையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக ஒருவேளை ரஜினி குரல் எழுப்பினால் அவரை ஆப் செய்து விடலாம் என்றும், அதுவரை ரஜினியை சீண்டாமல் இருப்பதே நல்லது என்றும் முதல்வர் நினைக்கிறாரா என்று கேள்வி எழும்பியுள்ளது. மேலும் வருகிற தேர்தலில் ஒருவேளை கூட்டணி கட்சிகள் கூட மாறலாம். இதை மனதில் வைத்துக் கொண்டு தான் முதல்வர் தொண்டர்களுக்கு அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.