திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே குட்டப்பாளையம் பகுதியில் சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய கால்நடைகள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் விவசாயத்துடன் இணைந்த சுற்றுச்சூழல் போன்றவைகள் குறித்து ஒரு நாள் களப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் ஒரு நாட்டு மாட்டை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பின் காங்கேயம் காளைகள் குறைந்த அளவு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு மற்றும் வண்டி இழுப்பதில் புகழ்பெற்றது.
இதுபோன்ற நாட்டு மாடுகளின் பெருமையை கண்டிப்பாக இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியானது மாணவர்களிடையே தற்சார்பு குறித்த நம்பிக்கையை வளர்க்கும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தங்களால் நாட்டு மாடுகள், அவற்றின் சிறப்புகள், மழை குறைவாக பெய்யும் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, இயற்கை விவசாயம், இயற்கை விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு, மனிதனோடு கால்நடைகள் எவ்வாறு ஒன்றி இருக்கிறது, நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகள் மற்றும் எதற்காக மரம் வளர்க்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளனர்.