இந்தியாவில் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் பல கலவரங்கள் ஏற்படுகிறது. மேலும் இறையாண்மை பாதிப்படையகூடிய வகையிலான பிரச்சனைகளுக்கு வழிவகுகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது மிகத்தவறானது. அவ்வாறு அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பல்வேறு கட்சிகள் மதத்தின் பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முரளி போன்றோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், சின்னங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பின் அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது பற்றி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணையின்போது அரசியல் கட்சிகள் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.