விநாயகர் சிலையுடன் சென்ற டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஒன்றிய பகுதியில் நேற்று மாலை விநாயகர் சிலையை கரைப்பதற்காக பள்ளிகொண்டான் அணைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். மேலும் பூதப்பாண்டி உச்சமாகாளி அம்மன் கோவில் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையையும் டெம்போவில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அந்த வாகனம் கண்டன்குழி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிலைக்கும், டெம்போவில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்த டெம்போவை மீட்டனர். பிறகு விநாயகர் சிலை பள்ளிகொண்டான் அணையில் கரைக்கப்பட்டது.