இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகிய முதல் நாளே உலகம் முழுதும் ரூபாய்.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக சரிந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் ரூபாய்.55 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தின் ஒருபகுதியை சார்மி கவுர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரூபாய்.6 கோடி வரை அவர் நஷ்ட ஈடாக தரலாம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று படத்தால் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க இயக்குனர் பூரி ஜெகந்நாத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.