Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்டால் பரிசீலிக்கப்படும்… ‘சின்மயி ஒரு விளம்பரப் பிரியர் – ராதாரவி!

பாடகி சின்மயி தங்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், சின்மயி விளம்பரப் பிரியராக இருப்பதால் அவதூறு கிளப்பி வருவதாகவும் ராதாரவி தெரிவித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் இன்று திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலானது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியின்றி நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் போட்டியிட்ட பாடகி சின்மயிவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற பதவிகளான துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பொறுப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, யூனியனைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் நிலையில், மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி, டப்பிங் யூனியன் தலைவராகப் போட்டியின்றி தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். யூனியன் நலனுக்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். பாடகரும், டப்பிங் யூனியன் கலைஞருமான பாடகி சின்மயி, மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தங்கள் மீது தவறான குற்றச்சாட்டை தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக குறிப்பிட்டார். சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால், தொடர்ந்து அவர் அவதூறு பேசி வருகிறார். நடிகர் நாசர் தங்களிடம் கேட்டிருந்தால், தாங்களே தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து இருப்போம் என்றார்.

இந்நிலையில், ராதாரவி காலில் விழுந்து தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், சட்ட ரீதியாத இப்பிரச்னையை அனுகப் போவதாகவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |