பெங்களூரு நகரிலுள்ள பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்லவேண்டிய நிலை உருவாகியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மி.மீ மழைபெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பல பேர் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு டிராக்டர்களில் சென்றனர். பெங்களூரு நகரத்திலுள்ள ஐடி ஊழியர்களுக்கு டிராக்டர் சவாரி செய்வது முற்றிலும் புது அனுபவமாகும்.
டிராக்டர் சவாரி பற்றி ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கூறியதாவது, அலுவலகத்தில் லீவ்வெடுக்க முடியாது. ரூபாய்.50 கொடுத்துதான் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடுத்த டிராக்டர் வரும்வரை காத்திருக்கிறோம் என்று கூறினார். சென்ற ஆகஸ்டுமாதம் 30-ஆம் தேதி பெங்களூருவில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பெங்களூரு புறநகர் சாலையானது (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி அச்சாலையில் அமைந்துள்ள மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்குவர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தியது. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூபாய்.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன. இது தொடர்பான புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டுமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.