சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். வீடியோக்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் ஷாகின் பாக்கில் இரண்டு மாதங்களாக போராட்டம் நடக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஜனநாயகக் குரலை நெறிக்கும் செயல்.
பல மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். என்.பி.ஆருக்கும், என்.ஆர்.சிக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் குடியுரிமை பதிவேட்டின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. குடியுரிமையை சந்தேகிக்கக் கூடிய கணக்கெடுப்பு, திருத்தச் சட்டம் ஆகியவற்றை செய்யப்போவதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை.
சென்னையில் நடந்தத் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக எழுதி தரவில்லை. அதனால் அவர் வாய் திறக்கவில்லை. அசாமில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் இருப்பதற்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தாரா. ரஜினிகாந்த் பாஜகவின் வசனங்களை வாசிப்பவராகத்தான் உள்ளார்” என்றார்