மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஸ்டேட் வங்கி அருகில் நரசியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலி(50) என்ற மனைவி உள்ளார். இவர் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு சென்று கமலிடம் ஒரு பழைய பத்திரிக்கையை கொடுத்து 20 ஜெராக்ஸ் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அதனை கமலி ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் கடைக்குள் புகுந்து கட்டையால் மூதாட்டியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த கமலியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அடுத்து படுகாயமடைந்த கமலியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.