அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு- தாண்டிக்குடி இடைய அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று காலை அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் மற்றொரு அரசு பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் தாண்டிகுடியிலிருந்து வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கோழிஊத்து மற்றும் முருகன் கோவில் இடையே வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 80-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.