தற்போதைய சூழலில் நேரத்தைக் கழிக்க பலவிதமான பொழுதுபோக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளன. பலர் அதில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட வழிதேடி உடற்பயிற்சி, சைக்கிளிங், நீண்ட தூர இருசக்கரப் பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பலர் பொழுதுபோக்காக இதை செய்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ட்ரேடர்ஸ் என்ற சைக்கிள் குழுவினர் மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற மிதிவண்டிப் பயணத்தை செய்து வருகின்றனர்.
குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை, கல்வி கொடுத்து உயர்த்த கடந்த 10 ஆண்டுகளாக குளோபல் ஏய்டு என்ற அமைப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளது. இதன் மூலமாக பழங்குடியின மாணவர்களுக்குத் தேவையான தங்குமிடம் கல்வி, புத்தகம் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்காக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இணையம் வழியாக 10 ஆண்டுகளாக நிதியை திரட்டி வருகின்றனர். இப்படியாக அமராவதி, விசாகப்பட்டினம், மைசூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு சைக்கிள் மூலமாக சென்று, நிதியை இணையம் வழியாகத் திரட்டி, மாணவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து குழுவைச் சேர்ந்த துர்கா பிரசாத் பேசும்போது, ‘நாங்கள் மிதிவண்டி பயணம் செய்வதைப் பொழுதுபோக்காக கொண்டிருந்தோம். இதன் மூலம் சமுதாய மாற்றத்தை உருவாக்க எண்ணி, இதை செய்து வருகிறோம். இதனால் நாங்கள் உடல் வலிமை அடைவதோடு, எங்கள் பயணம் மூலமாக மாணவர்களின் வாழ்க்கை மாறுவதை நாங்கள் உணர்கிறோம்.
கடந்தமுறை அமராவதி, விசாகப்பட்டினம், மைசூரு உள்ளிட்டப் பகுதிகளுக்கு சென்று வந்தோம். இதன் மூலம் இணையம் வழியாக பணத்தைப் பெற்று, மாணவர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்தினோம். தற்பொழுது அப்துல் கலாமை 2020ஆம் ஆண்டு கனவு மையமாகக் கொண்டு, அவர் பெயரில் அப்துல்கலாம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டோம். சைக்கிள் பயணத்தை பிப்ரவரி 8இல் துவங்கி நேற்று அப்துல் கலாமின் நினைவிடத்தில் 1200 கிலோமீட்டர் கடந்து முடித்துள்ளோம்.
இதன் மூலம் தற்பொழுது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இணையம் மூலம் திரட்டி உள்ளோம். 11 லட்சம் வரை தொகை கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்தப் பணம் மூலம் பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்த இதைப் பயன்படுத்துவோம்’ இவ்வாறு தெரிவித்தார்.
இளைஞர்கள் சமூக ஊடகம், டிக்டாக் போன்ற செயலிகளில் விழுந்து நேரத்தை விரயமாக்கும் இந்த சூழலில் இதுபோன்ற இளைஞர்கள் செய்வது பெருமைக்குரிய என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.