சென்ற 27 வருடங்களில் நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவங்கிய அனில் சவுகான் என்பவர், சென்ற 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி இருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் அனில் சவுகானை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். தேஷ்பந்து குப்தா சாலைப் பகுதியிலிருந்து அவரை காவல்துறையினர் பிடித்தனர்.
இதுகுறித்த விசாரணையில் கடந்த 27 வருடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான் கார்களை அனில் சவுகான் திருடியது தெரியவந்துள்ளது. அந்த காலக் கட்டத்தில் குறிப்பாக மாருதி 800 கார்களை மட்டுமே குறிவைத்து அனில் சவுகான் திருடி வந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொள்ளை சம்பவத்தின் போது சில கார் டிரைவர்களை அனில் சவுகான் கொலை செய்துள்ளதாகவும், இப்போது ஆயுத கடத்தலில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கொள்ளையடித்த கார்களை விற்று டெல்லி, மும்பை, வட கிழக்கு மாநிலங்கள் என பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்து, அனில் சவுகான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது 52 வயதாகும் அனில் சவுகான் மீது மொத்தம் 180 வழக்குகள் இருக்கிறது. இதற்கு முன்னதாகவும் அவர் பல முறை கைது செய்யப்பட்டு உள்ளார். ஒரு முறை 5 ஆண்டு சிறைத் தண்டனையும் பெற்றுள்ளார். இதனிடையில் அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 பிள்ளைகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அசாமில் அரசு ஒப்பந்ததாரராக இருந்த அவர், அங்கு உள்ள உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடம் இருந்து 6 கைத் துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர்.