நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவரின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது மாபெரும் கண்டனத்திற்குரியது. நடிப்பின் பல்கலைக்கழகமாக விளங்கிய ஒரு மாபெரும் கலைஞரின் திருவுருவ சிலையை திறக்க அனுமதி கிடைக்காத அவல நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகிறது. இது தமிழ் இனத்திற்கே பேரவமானம் ஆகும். கடந்த 2011-ஆம் ஆண்டு பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை திறப்பதற்கு இன்று வரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த சிலையை திறப்பதற்கு நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்கள் பலமுறை முயற்சி செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தான் அனுமதி கிடைக்கவில்லை என்று பார்த்தால், தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்தும் சிலையை திறப்பதற்கான அனுமதியை கொடுக்கவில்லை. இது உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடத்திலும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிலையை திறப்பதற்காக ரசிகர்கள் மற்றும் அவர்களின் சார்பில் அதிகாரிகள் என பலமுறை அரசாங்கத்திடம் முறையிட்டும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் சிலையை திறப்பதற்கு அனுமதி கொடுக்காதது புகழின் உச்சிக்கு சென்றவரின் மீதான காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு எதுவுமே கிடையாது. பாலிவுட் ஹீரோகளுக்கு இங்கிலாந்து உட்பட பல்வேறு வெளிநாடுகளில் சிலை திறந்து கௌரவப்படுத்துகின்றனர்.
நம்முடைய தமிழ்நாட்டிலும் மற்ற மொழியை சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகளின் சிலைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த சிலைகளை எல்லாம் வைப்பதற்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தனின் சிலையை திறக்க அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்துவது மறைந்த கலைஞனின் மரியாதைக்கு செய்யும் மாபெரும் அவ மரியாதை ஆகும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மாபெரும் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும். ஒருவேளை அனுமதி கொடுக்க தாமதமாகும் பட்சத்தில் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களின் முன்னிலையில் நானே சிலையை திறந்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!https://t.co/7XMuFt49JT@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/zfz3bB6WV8
— சீமான் (@SeemanOfficial) September 6, 2022