சீனாவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு லுடிங் நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 29 பேர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹன்சி தீபெதின் நகரில் அமைந்துள்ள லுடிங்கை சேர்ந்தவர்கள் என்றும் 17 பேர் யாயன் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.