சென்னை சவுகார்பேட்டையில் தொழில் வரி செலுத்தாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாகத் தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தொகை நிலுவை வைத்துள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின் பெயரில் இன்று தொழில் உரிமம், தொழில்வரி, வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குடோன் தெரு பகுதியில் தொழில் வரி செலுத்தாத கடைகள் மற்றும் தொழில் உரிமம் பெறாத 160 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். ஒரு பகுதியில் மட்டும் தொழில் வரி மற்றும் உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.