Categories
மாநில செய்திகள்

மெட்ரோ தொடர்வண்டி நிர்வாக அறிவிப்பால் குழப்பம்!

சென்னை மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களிலும், தொடர்வண்டியிலும் சிறிய ரக மற்றும் ஸ்மார்ட் சைக்கிளை கொண்டு செல்லலாம் என்ற மெட்ரோ நிர்வாகத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம், அதிக அளவிலான மக்களை மெட்ரோ தொடர்வண்டியைப் பயன்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் இசைக் கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. மேலும், கூட்டம் குறைவாக உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிக் கட்டணத்திற்கு மெட்ரோ தொடர்வண்டியில் பொதுமக்கள் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பும் கிடைத்து வருகிறது.

மெட்ரோ தொடர்வண்டியில் இருந்து இறங்கி கடைசி கட்ட தூரத்துக்கு செல்ல தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அருகில் உள்ள முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களுக்கு இணைப்புச் சீருந்து சேவை இயக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல், சென்னை மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களிலும், தொடர்வண்டியிலும் சிறிய ரக மற்றும் ஸ்மார்ட் சைக்கிளை பொதுமக்கள் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் கடைசி கட்ட தூரத்தை அடைய இது வசதியாக இருந்தாலும், சிறிய மற்றும் ஸ்மார்ட் சைக்கிள்கள் என மெட்ரோ நிர்வாகம் எதனைக் குறிக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சாதாரண சைக்கிள்கள் அனுமதிக்கப்படுமா, கூட்ட நெரிசல் இருக்கும்போது சைக்கிளை எப்படி கொண்டுசெல்லமுடியும். அந்த நேரங்களில் அனுமதி மறுக்கப்படுமா உள்ளிட்டக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |