பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும் 50 செம்மறி ஆடுகளையும் சொந்த செலவிற்காக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக 30 ஆடுகளை விற்பனை செய்து பணம் பெற்று இருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் இரவு மது போதையில் வந்து ஆடு விற்பனை செய்ததில் வந்த பணத்தில் பங்கு கேட்டு அமிர்தத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அமிர்தம் பணம் தர மறுத்ததால் கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்கியுள்ளார். மேலும் கல்லை தூக்கி தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது உயிரிழந்திருந்தார். இதன்பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமிர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.