ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது. இந்த தோல்வி வாயிலாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து இருக்கிறது. இனி பாகிஸ்தான் உட்பட பிற அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “நேற்றைய போட்டியில் எங்கள் அணி 10-15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது. 2வது பாதியில் நாங்கள் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை.
பெரிய ஸ்கோரை எடுத்த பிறகு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்து இருந்தோம். ஆனால் எங்களின் திட்டமானது பலிக்கவில்லை. இலங்கை வீரர்கள் நீண்ட நேரம் நின்று சிறப்பாக பேட்டிங்செய்தனர். இதனிடையில் அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்து வீசினார். அத்துடன் சாஹல் மற்றும் புவி போன்றோரும் சிறப்பாக செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நாங்கள் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது. கடந்த தொடர்களில் விளையாடும்போது சிலவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடித்து இருக்கிறோம். உண்மையை சொல்வதென்றால் இந்த நாட்களில் எங்களது சகவீரர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பார்ப்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்டதால் அர்ஷ்தீப் ஏமாற்றம் அடைந்தார். இதுபோன்ற தோல்விகள் அணி எப்படி ஒரு குழுவாக இணைந்து பணிபுரிவது என்பதைப் புரியவைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.