தமிழக கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தையடுத்து பள்ளி முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் போது மாணவி பயின்று வந்த தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்ட அந்த விடுதி அரசு அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகள் முழுவதும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதனால் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வும் மேற்கொண்டார். இந்த ஆய்வில் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என்று கண்டறிந்தார். இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனைப் போல சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழக முழுவது விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படும். மேலும் தவறு செய்யும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.