கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாட்டின் முதல் நாசிதடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் டுவிட்டர் வாயிலாக, பாரத் பயோடெக்கின் கோவிட் 19 மறு சீரமைப்பு நாசிதடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்19 வைரசுக்கான இந்தியாவின் முதல் நாசிதடுப்பூசி இதுவாகும். இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இதுஒரு பெரும் ஊக்கம். பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசிதடுப்பூசி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட் மூலம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தொற்று நோய்க்கு எதிரான நம் கூட்டு முயற்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது என தனது அடுத்த டுவிட்டில் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் கோவிட்19-க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது எனக் கூறியுள்ளார். நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியே கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள்பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் ஏராளமான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அத்துடன் மூக்கின் உள்பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாசிதடுப்பூசியின் பயன்கள்
# ஊசியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
# சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி தேவை இல்லை.
# குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்துவது எளிதாக இருக்கும்.
# செலவு குறைவு என்பதால் உலகெங்கிலும் விநியோகம் செய்ய முடியும்.
நாசிதடுப்பூசி – பக்க விளைவுகள் இல்லை:
ஹைதராபாத்தை தளமாக உடைய நிறுவனம் சுமார்4,000 தன்னார்வலர்களுடன் நாசிதடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்தது. இதுவரையும் எந்த பக்க விளைவுகளும் (அல்லது) பாதகமான எதிர்வினையும் இல்லை என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.