பூச்சி மருந்து அடித்தபோது மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் சாஸ்தான் கோவில் தெருவில் நேசையன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான நேசையன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த முதியவரை அவரது மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது பூச்சி மருந்து அடித்தபோது அதனை சுவாசித்ததால் உடலுக்குள் பூச்சி மருந்து சென்று முதியவர் மயங்கி விழுந்தது தெரிந்தது. நேற்று காலை சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.