திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் மதுரையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. இதையடுத்து பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளிமாணவர்கள் 3 பேர் அரசு பேருந்து மீது மோதினர். இதனால் வாகனம் தீப்பிடித்ததோடு பேருந்திலும் தீ பரவியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஜெயபால் என்பவருடைய மகன் பிரவீன் ஆவார்.
இவர் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சமபவத்தன்று பிரவீன்க்கு பிறந்தநாள். இதன் காரணமாக ஒரே வாகனத்தில் நண்பர்கள் 3 பேர் சென்று பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பள்ளி அருகேயுள்ள சக நண்பரை பார்க்க வந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் பரிதாபமாக இறந்தார்.
அத்துடன் இருசக்கரவாகனத்தில் பயணம் செய்த நாகனம்பட்டியை சேர்ந்த ஆகாஷ், நரிப்பட்டியை சேர்ந்த நரசிம்மன் ஆகிய 2 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் பேருந்து தீப்பிடித்தும் அதில் பயணம் செய்த அனைவரும் உடனே கீழே இறங்கியதால் அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஆனால் பேருந்து எரிந்து நாசமானது. அதன்பின் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கள் துறை அமைச்சர் சக்ரபாணி விபத்து நடந்த அரசு பேருந்து பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்து வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.