பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடசாமி(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இதில் சதாம்(39) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அந்த பேருந்தில் 59 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நகர்த்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 20 அடி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பொன்னம்மாள், ராசம்மாள், செல்வன், பிரசாந்த் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.