ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா போர் விமானங்களில் ஒன்றை ஹவுதி கிளர்ச்சி படையினர் சுட்டுவீழ்த்தியது மட்டுமில்லாமல், இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்த சவூதி அரேபியா கூட்டணி படையினர் நேற்று, ஏமனில் ஹவுதி கிளர்ச்சிபடையினர் கட்டுப்பாட்டிலுள்ள அல் ஹய்ஜா (Al-Hayjah) பகுதி மீது திடீர் விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சி படையினர் யாரும் இறக்கவில்லை. அப்பாவி மக்கள் 31 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹவுதி கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.