நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் 17.64 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதியதில் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் படி ஒட்டுமொத்தமாக 56.30% பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதனைப் போல தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30 வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43வது இடமும் பிடித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், மராத்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் நிகழாண்டு தேர்வில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மொத்த 1.32 லட்சம் மாணவ மாணவிகளின் 32 ஆயிரம் பேர் தமிழில் தேர்வு எழுதினார். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 62% ஆகும். தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. தமிழகத்தில் மொத்த 1,32,167 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில் 67,789 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.4% சதவீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதையடுத்து நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 91,000 க்கு அதிகமான MBBS இடங்களுக்கும், 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 26,773 BDS இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43,915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48,012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மொத்த இடங்களில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு ஆகும். மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர் போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும்