தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்துள்ளார்.
ஆம், நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. விராட் 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்..
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது முதல் சதமாகும். ஒட்டுமொத்தமாக இது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி.. ஆசிய கோப்பை தொடரின் இரண்டு ஆட்டங்களில் அரைசதம் அடித்த விராட் கோலி நேற்று கடைசி லீக் போட்டியில் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.. விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து இருந்தார்..
தற்போது 1020 நாட்கள் & 83 இன்னிங்ஸ்க்கு பிறகு முதல் சதம் பதிவு செய்த விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் கிங் கோலி திடீரென ஃபார்முக்கு திரும்பியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்..
அனுஷ்கா சர்மாவும் தனது கணவர் விராட் கோலியின் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “எந்தவொரு மற்றும் எல்லாவற்றிலும் எப்போதும் உங்களுடன்” என்று குறிப்பிட்டுள்ளார். கருத்துகள் பிரிவில், விராட் கோலி ஹாட் ஈமோஜிகளை அனுப்பினார்.
.அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பல வருடங்கள் டேட்டிங்கிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி வாமிகா என்ற குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது..