கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அப்துல்சமீம் (32), தவுபீக் (28) ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாகக் கைதுசெய்தனர்.
பின்னர், இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர். இதனிடையே பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக தவுபீக், அப்துல் சமீம் உள்ளிட்ட இருவரையும் சேலம் மத்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள இருவரையும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் சேலம் அழைத்து வர சனிக்கிழமை காலை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்துவரும் நிலையில் பாதுகாப்பு கருதி இருவரையும் மதுரை சிறைக்கு அழைத்து சென்றதாகவும், தொடர்ந்து இன்று அவர்களை சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரவுள்ளதாகவும் சிறைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.