நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இக்கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்ககோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யவேண்டும் என விஷாலுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்ற முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜரான விஷால் இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல் முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை எனவும் தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன்பின் விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விபரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் உத்தவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுபடி சொத்து விபரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் நடிகர் விஷால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.