தமிழகத்தில் நடந்துவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமாக பலரை கவரும் அடிப்படையில் பிளக்ஸ்பேனர்கள் வைப்பது இப்போது பேஷனாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் கொடைக் கானல் மன்னவனூர் மலைக்கிராமத்தில் இன்று மயில்சாமி என்பவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் திருமணம் நடைபெறயிருக்கிறது. இதையடுத்து இந்த மணமக்களை வாழ்த்தும் விதமாக அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் வித்தியாசமாக யூடியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழில் வருவது போல வாசங்கள் இடம் பெறச் செய்து அதை காட்சிப்படுத்தி வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்பேனர்கள் வைத்துள்ளனர்.
அந்த பேனர்களில் மணமக்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு யூடியூப் சேனலில் அடுத்து வரும் வீடியோ பக்கங்களில் நண்பர்கள் புகைப்படம் மற்றும் வசனத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நாளிதழ் எனவும் கலகலப்பு செய்திகள் என்று வித்தியாசமாக வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதேபோன்று வருகிற 12ம் தேதி நடைபெறும் மற்றொரு திருமணத்துக்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் நித்தியானந்தா புகைப்படம் பொறிக்கப்பட்டு நோ சூடு,நோ சொரணை எனவும் மன்னவனூர் டு கைலாசா எனவும் கைலாச வாசிகள் என நண்பர்கள் புகைப்படங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி கைலாச நாட்டிலுள்ள ஆசிரமத்தில் சேர விரும்புவோருக்கு 3 தினங்கள் இலவசவிசா மற்றும் தங்குமிடம், உணவு இலவசம் என வாசகங்கள் இந்த பேனரில் இடம்பெற்றுள்ளது. மன்னவனூர் மலை கிராமத்தில் வித்தியாசமான முறையில் வாசகங்கள் அடங்கிய திருமணவாழ்த்து பிளக்ஸ் பேனர்களை அப்பகுதியில் மலை கிராமத்து இளைஞர்கள் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பிளக்ஸ் பேனர்களின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.