ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து காவிலிபாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பேருந்து ஒன்று புறப்பட்டது. அதிலிருந்த நடத்துனர் ரமேஷ் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியபோது குடிபோதையில் இருந்த பயணி கனகராஜ் என்பவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டார்.
பயணி கனகராஜ் டிக்கெட் வாங்காமல் தொடர்ந்து பயணித்தையடுத்து அரியப்பம்பாளையம் – பெரியூர் சந்திப்பில் நடத்துனார் ரமேஷ் பேருந்தை நிறுத்தி டிக்கெட் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பயணி கனகராஜ் நடத்துனரை தாக்கியுள்ளார். இதையடுத்து ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த காவல் துறையினர் குடிபோதையில் இருந்த கனகராஜை பிடித்து விசாரிக்கும்போது அவர் தப்பியோடினர். நடத்துனரை தாக்கிவிட்டு தப்பியோடிய பெரியூரைச் சேர்ந்த கனகராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி எதிர்பை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தப்பியோடி நபரை பிடித்து விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தையடுத்து பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.