சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே ஹை மெரா தில்” என்ற காதல் நதி நாடகத்தில் நடித்தார். பின்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜி டிவியில் “சோப்ரா ஓபரா பவித்ரா ரிஷ்டா” என்ற தொடரில் நடித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு “கை போ சே! “என்ற திரைப்படம் மூலம் சுஷாந்த் சிங் வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்நிலையில் பி.கே என்ற நகைச்சுவை திரைப்படத்தில் சுஷாந்த் சிங் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எம்.எஸ்.தோனி தி அண்ட்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு முதலில் சுஷாந்த் சிங் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து வெற்றி படங்களான கேதார்நாத்(2018), சிச்சோர்(2019) ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது மரணத்திற்கு பிறகு கடைசி படமான தில் பெச்சாரா(2020) ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் இருக்கும் குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது. மேலும் சுஷாந்த் சிங் தனது காதலி ரியா சகரபர்த்தி பிரிந்து சென்றதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் அதிலிருந்து விடுபட்டு நம்பிக்கையுடன் வாழலாம். மாறாக பிரபல நடிகரே மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக பரவிய தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.