மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பற்றி தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முன்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில் “நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பன்மடங்கு அதிகமாக கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளர் கல்விக்கழக செயலாளர் வசூலித்து வருகின்றனர்.
சென்ற 2021-2022ஆம் வருடம் மாவட்ட கல்லூரி இணை இயக்குனர் விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக 2021 ஆண்டு 12 லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் நிலுவையிலிருந்து வருகிறது. இந்த நிலையில் 2022-2023ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி முதல்வர், முதலில் விண்ணப்பம் செய்யும்படியும் பின் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்பது போல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதனை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் டிஎன்டி அமைப்பினர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.
ஆகவே தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகா தேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதிகள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்த விதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச்செலவையும் அரசாங்கமே வழங்குகிறது.
அத்துடன் கல்வி என்பது மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் கல்வி பயின்றுவரும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும், கல்விநிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ(BMW) காரிலும் பயணிப்பதுமே தற்போதைய நிலையாக இருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் குறித்து தமிழ்நாடு அரசானது என்னநடவடிக்கையை மேற்கொண்டுள்ளது? என கேள்வியெழுப்பினர். அதனை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.