மூன்று மாதம் வாடகை பாக்கி என்பதால் அரசு வங்கிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாகியை வங்கி நிர்வாகம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய உரிமையாளர் வங்கிக்கு நேற்று பூட்டு போட்டார்.
வங்கி பூட்டு போட்டதை பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கி தரப்பில் அதன்பிறகு பூட்டு அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மின் இணைப்பையும் கட்டிட உரிமையாளர் துண்டித்தார். நேற்று வங்கி மின்சாரம் இல்லாமல் இயங்கியது. வாடிக்கையாளர்கள் மின் வசதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதை அடுத்து கட்டட உரிமையாளரை சந்தித்து நிலுவை தொகையை செலுத்தி குத்தகை பாக்கியத்தை நிவர்த்தி செய்து தருவதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு வங்கி இயங்கி வந்த கட்டடத்துக்கு மின் இணைப்பை கட்டட உரிமையாளர் வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.