டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில், இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழலுக்கு அடுத்து டிஎன்பிஎஸ்சி ஊழல் தமிழ்நாட்டை உலுக்கியிருப்பதாகவும், தமிழ்நாடு பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறையைச் சார்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பிருப்பதற்கான முழு ஆதாரங்கள் உள்ளதாகவும், நியாயமான முறையில் சிபிசிபிஐ விசாரணை நடத்தினால்தான் முழு உண்மை வெளிவரும் என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தினகரன் நாளிதழில் வெளியான இந்த செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் ஜெயக்குமார், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதியளிக்குமாறு, தமிழ்நாடு பொதுப்பணித் துறையிடம் கோரியிருந்தார். அதற்கான அனுமதியை பொதுப்பணித் துறை இன்று வழங்கியிருக்கிறது.
அதே போல அமைச்சருக்கு தெரியாமல் டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதுவும் நடந்திருக்காது என விகடன் வார பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடர தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியிருக்கிறது. அனுமதியை தொடர்ந்து தயாநிதிமாறன், விகடன் பத்திரிகை மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி விசாரணையில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.