சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசர சட்டம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் இதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுடைய கருத்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள் கருத்து போன்றவற்றை எல்லாம் ஏற்கனவே கேட்டு பெறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விரைந்து தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள், பண இழப்பு ஏற்படக்கூடிய, மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்தையும் பட்டியலிடப்பட்டு அவற்றை தடை செய்வது தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வரக்கூடிய நிலையில். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். உடனடியாக இந்த சட்டத்தை கொண்டு வருவது பற்றியும், அதிலுள்ள சிக்கலை எப்படி சரி செய்வது? வரக்கூடிய சட்டம் என்பது நிரந்தர சட்டமாக கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது.
ஏற்கனவே தமிழக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது, அது நீதிமன்றத்திற்கு சென்று சட்டம் என்பது ரத்து செய்யப்பட்டது. எனவே ஒரு உறுதியான சட்டம் கொண்டு வர வேண்டும். இது மூலமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.