கர்நாடக மாநிலத்தில் வகுப்பில் டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று தெரியவந்துள்ளது. ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது, ஆசிரியர் ஹுலிகேப்பா, கொதிக்கும் நீரை ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். 40% தீக்காயம் அடைந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மருத்துவமனையில் சிறுவன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் ஆசிரியர் மீது எந்த ஒரு புகார் பதிவு செய்யப்படவில்லை. கொடுமைக்கு ஆளான சிறுவனை குழந்தைகள் நல குழு பார்வையிடவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மாவட்ட மகளிர் மட்டும் குழந்தைகள் நலத்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் தகவல் சேகரித்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.