பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்தும் உயர் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று சுல்தான் மீண்டும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டதால் சுல்தான் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக பெண் ஊழியர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சுல்தான் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அந்த பெண் சத்தம் போட்டதால் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு சுல்தான் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பெண் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுல்தானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.