அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களுடைய ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக அவ்வப்போது அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாங்கள் தான் அதிமுகவின் உண்மையான வாரிசு என்றும் அம்மா ஜெயலலிதா கைகாட்டியது என்னைத்தான் என்றும் கூறிவரும் நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஒரத்தநாடு பகுதியில் நடந்த ஒரு விழாவின் போது வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சனைகள் அடங்கிய பட்டியலை முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்கள் விவி ராஜன் செல்லப்பா மற்றும் பெரிய புள்ளான் வழங்கினார். அதன்பின் எம்எல்ஏ விவி ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.
அதன்பின் பெண்களுக்கு இலவச பேருந்து என்று அறிவித்தாலும், அந்த இலவச பேருந்தில் ஏறுவதற்காக பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தான் இருக்கிறதே தவிர இலவச பேருந்துகளால் எவ்வித பயனும் இல்லை. ஓ. பன்னீர்செல்வத்தை அவருடன் இருப்பவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஓபிஎஸ் தனக்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்தால் அவரை கட்சியில் சேர்க்கலாம். ஆனால் அது நடப்பதற்கு தற்போது வாய்ப்பே கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து மேலிடம் ஆலோசனை நடத்தும் என்று கூறினார்.
இவருடைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு கட்சியில் ஒருபோதும் இடம் கிடையாது என்று கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளது, சசிகலாவுக்கு தென் மாவட்டங்களில் ஆதரவான நிலைப்பாடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.