ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு கடந்த 6-ஆம் தேதி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்ததால் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீர் வரத்து குறைந்து 4 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனை அறிந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.