அழகான வரிகளால் அற்புதமாய் ஆன்மிகத்தை பற்றி விவேகானந்தர் கூறியுள்ளார்:
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தருடன் சக பயணியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும், புத்திக்கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனாலும், அற்புதங்களை பெரிதும் நம்புபவராக இருந்தார்.
சுவாமி விவேகானந்தர் தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமி விவேகானந்தரிடம் அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் நிகழாத பல அற்புதங்களை கூறினார். மகாத்மாக்களான சித்தர்கள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும், அடுத்த யுகம் பிறக்கும் போது எந்தெந்த சித்தர்கள் யார், யாராகப் பிறந்து, எப்படி, எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமி விவேகானந்தர் கூறினார்.
அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமி விவேகானந்தரை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.
அப்போதெல்லாம் சுவாமி விவேகானந்தர் கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணம் செய்வார். மற்றபடி உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார்.
பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் அன்புடன் அவரிடம் கூறினார். இவ்வளவு படிப்பும், அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனை கதைகளை எல்லாம் நம்புகிறீரே நண்பரே! நீர் புத்திசாலி. உம்மை போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா..?
நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியை பெறுவதே ஆன்மீகம். மேலும் ஆசைகளை வெல்வதுதான் ஆன்மீகம் என்றார் சுவாமி விவேகானந்தர்.