பஞ்சாபி பாடகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்ற மே 29ம் தேதியன்று தன் காரில் சென்றுகொண்டிருந்த போது, இவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கொடூர முறையில் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் குறித்து ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உடபட 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஹார் சிறையிலுள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவல்துறையினர் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். முன்பாக அமிர்தசரஸ் அருகில் நடைபெற்ற என்கவுன்டரில் பஞ்சாப் காவல்துறை, இருவரை சுட்டுக்கொன்றனர். அந்தகொலையில் தொடர்புடைய 3 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த சூழ்நிலையில் சித்துமூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் தன் கூட்டாளிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர்களை அடுத்த 6 தினங்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாடகர் கொலை வழக்கு பற்றி பஞ்சாப் காவல் துறை டிஜிபி கவுரவ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது “சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைத்து மும்பையில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்பாக ஜூன்மாதம் அவருக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அவற்றில் சலீம்கான் மற்றும் அவரது மகன் நடிகர் சல்மான் கான் ஆகிய இரண்டு பேரும், கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதியை விரைவில் சந்திக்கநேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானை குறி வைக்க, சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து ஒருதிட்டம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக மே 30 ஆம் தேதி காவல்துறைக்கு தெரியவந்தது. இதற்கிடையில் சித்துமூஸ்வாலா மரணவழக்கில் மொத்தம் 23 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். முழு விஷயத்தையும் விசாரிக்க 105 தினங்கள் ஆனது. அரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதுங்கி இருந்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சார்பில் சித்து மூஸ் வாலா கொலைக்கு கேங்க்ஸ்டர் கோல்டி பிரார் பொறுப்பேற்றார். இக்கொலைச் சம்பவம் பற்றி கென்யாவைச் சேர்ந்த ஒருவரும், அஜர்பைஜானைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தி இருக்கிறது” என்று அவர் கூறினார்.