கேரள மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கேரளத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அண்மையில் 12 வயது சிறுமி ஒருவர்நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் கூறியிருந்தார். இது போன்ற காரணங்களால் தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,”தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான் அந்த நாய்கள் பொதுமக்களை கடிக்காமல் இருக்க முயற்சி எடுக்கவேண்டும். மேலும், அதற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் நாய்க்கு உணவளிப்பவர்கள்தான் ஏற்கவேண்டும்” எனக் கூறினர். மேலும் இந்த வழக்கில் வரும் 28-ல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி இந்த வழக்கை ஒத்துவைத்தனர். நீதிபதி தெரிவித்த இந்த கருத்து தெரு நாய்களுக்கு உணவளிப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.