தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டண உயர்வாகும் என்றார்.