நாட்டின் தலைநகர் டெல்லியில் தனது சமஸ்தானத்தை மூன்றாவது முறையாக நிறுவுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ராம்லீலா மைதானத்தில் அம்மாநிலத்தின் ஜனநாயக சக்ரவர்த்தியாக இன்று அவருக்கு மக்கள் முன்னிலையில் முடிசூட்டப்பட்டது.
எதிரணிக்கு மன்னிப்பு :
தனது பதவியேற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சுமூகமான ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். தலைநகர் டெல்லியில் சீரான ஆட்சி வழங்க பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்” என்றுக் கூறினார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் பேசும்போது, “தேர்தல் பரப்புரை முடிந்துவிட்டது. தேர்தல் பரப்புரையின் போது எதிரணியினர் தெரிவித்த கருத்துக்காக அவர்களை மன்னித்துவிட்டேன்.
பிரதமர் ஆசிர்வாதம் :
நாங்கள் மக்களுக்கு சீரான ஆட்சியை கொடுக்க விரும்புகிறோம். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதம் அவசியம்.
கடந்த காலங்களில் ஆம் ஆத்மி மத்தியில் சில பிணக்குகள் இருந்தது. இருப்பினும் நான் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளவில்லை.
டெல்லி மக்களின் வெற்றி :
ஒட்டுமொத்த டெல்லி மக்களுக்காக பணிகள் செய்தோம். டெல்லி மகனான நான் மூன்றாவது முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறேன். இது எனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி” என்றார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜகவுக்கு எட்டு இடங்கள் மிஞ்சியது. காங்கிரஸ் வெறுங்கையுடன் திரும்பியது.