பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டில் குஜ்ரன்வாலா நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குஜ்ரன்வாலா புறப்பட்டுள்ளார். இவர் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமான மூலம் நேற்று புறப்பட்டார். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை வழியாக பயணித்து குஜ்ரன்வாலா சென்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவரான அசார் மஷ்வாணி விளக்கம் அளித்துள்ளார். அதில் “தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யானது. மோசமான வானிலையால் தான் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டது. இதுவே உண்மை” என அவர் கூறியுள்ளார்.