செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலுள்ள இரும்புலியூரில் வசித்து வருபவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக்ராஜ்(28). இவர் மீது கொலைமுயற்சி, திருட்டு, ஆள்கடத்தல், கஞ்சா உட்பட 12க்கும் அதிகமான வழக்குகள் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக்ராஜின் டார்கெட். அதன்படி தன்னிடம் சிக்கும் மாணவர்களிடம் விவேக்ராஜ் கஞ்சா,போதை ஊசி ஆகியவற்றை கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் சொல்லி அதில் கல்லாகட்டி வந்தார்.
இதுகுறித்து பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியும், விவேக்ராஜின் அட்டகாசம் ஓய்ந்தபாடில்லை. இதனால் ஸ்கெட்ச் போட்டுத் தேடப்படும் குற்றவாளியாக மாறிய விவேக்ராஜ் தன் நண்பர்களுடன் சேர்ந்து பயங்கர குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் முன்விரோதம் காரணமாக விவேக்ராஜுக்கும் தாம்பரத்தைச் சேர்ந்த லெனின், முகேஷ் ஆகிய ரவுடிகளுக்கும் இடையில் தீராத பகை ஏற்பட்டுள்ளது. பலமுறை மோதிக் கொண்டவர்கள் தாம்பரத்தின் அமைதிக்கு இடையூறாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் லெனின், முகேஷ் ஆகிய இருவரையும் பழிக்குப்பழி தீர்க்க நினைத்த விவேக்ராஜ், தன் கூட்டாளியான விஷாலுடன் இணைந்து திட்டம் தீட்டி இருக்கிறார். பட்டப் பகலில் வைத்து அந்தக் கொடூரத்தை அரங்கேற்ற நினைத்தவர்களின் திட்டம் எப்படியோ காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஆள்கடத்தல், அடிதடி, கஞ்சா என்ற போக்கில் வழக்கு மேல் வழக்குகளில் சிக்கியவர் தற்போது கொலை செய்யப் போட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் களத்தில் காவல்துறையினர் இறங்கி வேட்டையாடத் தயாரானார்கள்.
அந்த வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தாம்பரம் முழுக்க அலெர்ட் செய்யப்பட்டது. காவல்துறையினரின் தேடுதல் வேட்டையின் போது தாம்பரம் அடுத்த முடிச்சூர் பைபாஸ் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில், விவேக்ராஜும், விஷாலும் மது அருந்திக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் தாம்பரம் காவல்நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அதன்பின் டாஸ்மாக் கடையிலிருந்த விவேக்ராஜ் மற்றும் விஷாலை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது விவேக்ராஜும், விஷாலும் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து காவல்துறையினரை வெட்ட முயன்றனர். அவற்றில், சுதாரித்துக்கொண்ட தாம்பரம் போலீஸ் நிலைய ஆய்வாளர் சார்லஸ், தன் பாதுகாப்புக்காகக் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் குற்றவாளிகளைப் பார்த்து மிரட்டல் விடுத்தார். துப்பாக்கியைப் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றவர்கள், பைபாஸ் சாலை அருகேயுள்ள தண்ணீர் குழாய் பைப் மீது ஏறி ஓடினர். காவல்துறையினரும் விடாது அவர்களை விரட்டியபோது அங்குள்ள பள்ளத்தில் விவேக்ராஜ் தவறிவிழுந்தார்.
நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைக்க காவல்துறையினரிடம் விவேக்ராஜ் வசமாக மாட்டிக்கொண்டார். அத்துடன் தப்பியோடிய கூட்டாளி விஷாலையும் மடக்கிப் பிடித்தனர். பள்ளத்தில் விழுந்ததில் விவேக்ராஜுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பெரும் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு அவரை பலத்த பாதுகாப்போடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்தபிறகு விவேக்ராஜ், விஷால் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேக்ராஜ், விஷால் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர்.