டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அப்போது, கெஜ்ரிவால் போல் வேடமிட்ட சுட்டிப் பையனின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டானது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்த ‘சுட்டி கெஜ்ரிவாலுக்கு’ ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அழைப்பை ஏற்று இன்று நடைபெற்ற பதவியேற்வு விழாவில் ‘சுட்டி கெஜ்ரிவால்’ கலந்துகொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றார். அவருடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆசிரியர்கள், பெண்களுக்கான சிறப்பு பேருந்தின் பாதுகாவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தீயணைப்பு படை வீரர்களின் குடும்பத்தார் உள்பட பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். டெல்லி மாடலின் சிற்பிகள் இவர்கள்தான் என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில முதலமைச்சர்கள் உட்பட எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விழாவில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.