தமிழகத்தில் ரூபாய் 55 -ரூ 1,130 வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தனர். இதையடுத்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சூழலில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் 1 கோடி பேர் வரை இருக்கின்றனர்.
இந்த 1 கோடி நுகர்வோருக்கு எவ்விதமான மின்கட்டண உயர்வுமில்லை. 101 -200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு 1 மாதத்துக்கு 27ரூ 50 பைசா மட்டும் கட்டணங்களானது உயர்த்தப்பட்டுள்ளது. இது நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம் ஆகும். 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துவோர் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 301 முதல் 400 யூனிட்வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 18 லட்சத்து 82 ஆயிரம் பேர்.
இவர்களுக்கு 1 மாதத்திற்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் குறைந்த கட்டணங்கள் மட்டுமே உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதே கட்டணங்களை அருகிலுள்ள கர்நாடகாவுடன் ஒப்பிடும்போது 0 முதல் 100 யூனிட்வரை அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே 4 ரூபாய் 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் தமிழகத்தில் 100 யூனிட்வரை அனைத்து நுகர்வோருக்கும் இலவசம். குஜராத்தில் 0 -100 யூனிட் வரை 5 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 101 -200 யூனிட்வரை பயன்படுத்தும் 63 லட்சம் மின்நுகர்வோருக்கு 4 ரூபாய் 50 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தும் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்புவரக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2 ரூபாய் 25 பைசா மானியம்ஆக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். வீட்டுஉபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரையிலும் அருகில் கர்நாடகா, மத்திய அரசால் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய குஜராத் மாநிலமாக இருந்தாலும் சரி அவர்களை விட மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரையிலும், 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த நிலையிலுள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள், இவர்களுக்கும் 50 பைசா மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது” என்று பேசினார்.