அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷாசவுஹா கிராமத்தில் “மதராசா” எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இஸ்லாமிய மதம் குறித்த பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த மதப் பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் காணாமல்போன சிறுவன் சமீர் தான் படித்துவந்த இஸ்லாமிய மதப் பள்ளியில் கடந்த 5ம் தேதி சடலமாக மீட்கப்பட்டான். அதாவது அந்த மதப் பள்ளியிலுள்ள கீழ் தளத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுவனை கொலை செய்து உடலை புதைத்தது யார்..? மரணத்திற்கான காரணம் என்ன..? உட்பட பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 11 வயது சிறுவன் சமீரை அதே மதப் பள்ளியில் பயின்றுவந்த சகமாணவனான 13 வயது சிறுவனே கொலை செய்துள்ளான் என்ற பரபரப்பு உண்மை வெளிவந்துள்ளது. மதப்பாடம் படிக்க விருப்பம் இல்லாததால் மத பள்ளிக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தோடு சகமாணவனான சமீரை கொலை செய்து உடலை மத பள்ளியின் கீழ் தளத்தில் புதைத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் 11 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.