டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவாலுடன் மணிஷ் சிசோடியா, சத்யந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசேன், ராஜேந்திர கவுதாமாஸ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, இலவச பஸ் பயணம் என பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்திய ஆம் ஆத்மி, அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் கொடுக்காததை எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.
ஆம் ஆத்மி சார்பாக டெல்லியில் 9 பெண்கள் களமிறக்கப்பட்டனர். அதில் அதிஷி மர்லேனா, ராக்கி பிர்லா, ராஜ் குமாரி தில்லான், பிரித்தி தோமர் உள்பட 8 பேர் வெற்றிபெற்றனர். முக்கியமாக, ஆம் ஆத்மி ஆட்சியில் கல்வித் துறையின் முக்கிய ஆலோசகராக செயல்பட்ட அதிஷி மர்லேனாவுக்கு அமைச்சர் பதவி தராதது பேசு பொருளாக மாறியுள்ளது.